×

அனுமதியின்றி வைக்கப்பட்ட 153 விளம்பர பலகைகள் பதாகைகள் அகற்றம்: தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக பராமரிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சுவர்கள், மேம்பால தூண்களில் ஓவியங்கள் வரைதல் போன்ற அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமீறி வைத்துள்ள விளம்பர பலகைகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 1, 3, 4, 5 ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் கட்டிடங்கள் மீது வைக்கப்பட்டிருந்த 14 விளம்பர பலகைகள், 139 விளம்பர பதாகைகள் கண்டறியப்பட்டு, அவை மாநகராட்சி அலுவலர்களால் நேற்று அகற்றப்பட்டது.

அப்போது, விளம்பர பலகைகளை அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மேலும் மாநகராட்சியை தூய்மையுடனும், அழகுடனும் பராமரிக்க பொதுமக்கள் மற்றும் பிற அமைப்புகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தெருக்கள், சாலைகள், மின்சார கம்பங்கள் மற்றும் கட்டிடங்கள் மீது வைக்கப்படும் விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்படும் என்றும், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post அனுமதியின்றி வைக்கப்பட்ட 153 விளம்பர பலகைகள் பதாகைகள் அகற்றம்: தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...